இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கையை தொழில் நுட்பங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. மின்சாரம், ஸ்மார்ட் போன், இணையதளம் போன்றவைகள் தற்போது மனிதர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக மாறிவிட்டது. ஆனால் இந்த நவீன காலகட்டத்திலும் ஸ்மார்ட்போன், மின்சாரம் போன்ற எந்த தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் ஒரு கிராம மக்கள் வசிக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?. ஆம் அப்படி ஒரு அதிசய கிராமம் இருக்கிறது. அதாவது ஆந்திர பிரதேச மாநிலத்தில் குர்மா என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் சிமெண்ட் மற்றும் செங்கல் போன்றவைகளை பயன்படுத்தி வீடுகள் கட்டாமல் வெறும் மண் சுவர்களால் வீடுகள் கட்டியுள்ளனர். அதோடு இந்த கிராமத்தில் செல்போன், மின்சாரம் போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் கிடையாது. இந்த மக்கள் தங்களுக்கு எந்த ஒரு தொழில்நுட்பங்களும் தேவை இல்லை என்று கூறிவிட்டு இயற்கையோடு ஒன்றி வாழ்கிறார்கள்.
அதோடு தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பயிர்கள் போன்றவற்றை தாங்களே விளைவித்து சாப்பிடுவதோடு தங்கள் கிராமத்தில் பாடசாலை அமைத்து தங்கள் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் இலவசமாக கல்வியும் கற்பித்து கொடுக்கிறார்கள். இவர்கள் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் கூட தொடர்பில் இல்லை. மேலும் இன்றைய காலகட்டத்திலும் கற்கால மனிதர்களைப் போன்று குர்மா கிராம மக்கள் வாழ்வது அனைவரது மத்தியிலும் வியப்பையும், ஆச்சரியத்தையும், பல கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.