வாகனங்களின் பதிவை நாடு முழுவதும் தடை இல்லாமல் மாற்றும் அடிப்படையில் கடந்த 2021ம் ஆகஸ்ட் 26-ல் சட்டபூர்வமான பொதுவிதியை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டது. இதையடுத்து பாரத் தொடர் வரிசை (BH) எனும் புது பதிவுமுறை மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989-ல் சேர்க்கப்பட்டது. இது 2021-ம் வருடம் செப்..15-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இவ்விதிகள் அமலாக்கம் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
இந்நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் தொடர் வரிசை பதிவுமுறை, அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பாதுகாப்பு அலுவலர்கள், மத்திய-மாநில அரசு ஊழியர்கள், மத்திய-மாநில பொதுத்துறை நிறுவனங்கள் போன்றோருக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பின் கர்நாடகாவிலுள்ள தனியார் நிறுவன ஊழியர் ஷாலினி மற்றும் பலர் “தனியார் துறையில் பணியாற்றும் ஏராளமான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் தங்களது வசதி மற்றும் ஊதிய உயர்வுக்கு ஏற்றவாறு ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்துக்கு அடிக்கடி மாற வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே தனியார் நிறுவன ஊழியர்களின் வாகனங்களுக்கும் உரிய ஆவணங்களின் படி பாரத் தொடர் வரிசை பதிவு முறையை பின்பற்ற அனுமதி வழங்க வேண்டும்” என உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி சி.எம்.பூனாச்சா, “ஆகஸ்ட் 2021-ம் வருடத்தில் மத்திய அரசு திருத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி கர்நாடக அரசு தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கும் பாரத் தொடர் வரிசை பதிவு முறையை நடைமுறைபடுத்த வேண்டும்” என உத்தரவு பிறப்பித்துள்ளார்..