பாலிவுட் சினிமாவில் டாப் ஹீரோவாக வலம் வரும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்க தீபிகா படுகோனே ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் சிங்கிளான பேஷ்ரம் ரங் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தீபிகா படுகோனே இதுவரை இல்லாத அளவுக்கு பிகினியில் உச்சகட்ட கவர்ச்சியில் நடித்துள்ளார். இந்த பாடலுக்கு தற்போது கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதோடு பதான் படத்தை புறக்கணிக்க வேண்டும் என இந்துக்கள் கூறி வருகிறார்கள்.
ஏனெனில் இந்த பாடலில் தீபிகா காவிநிற பிகினி உடையை அணிந்திருப்பதோடு பேஷ்ரங் என்ற வார்த்தைக்கு வெட்கமற்ற நிறம் என்பது அர்த்தமாம். இதன் காரணமாக இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, மத்திய மந்திரி நரோட்டம் மிஸ்ராவும் பதான் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து படத்தை திரையிட அனுமதி மறுக்கப்படும் என்று எச்சரித்தார். அதோடு பல அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களும் தான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதீர் சுகுமார் என்பவர் முஸாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பதான் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார். அவர் பதான் பட தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் ஜனவரி 3-ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.