வயலூர் கிராமத்தில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வயலூர் கிராமத்தில் ராணிப்பேட்டையை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் உறவினர் தனக்கு சொந்தமான இடத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க இருப்பதாகவும் அதற்காக நிலத்தைச் சுற்றி உயரமான சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் தெரிகின்றது. இதனால் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது.
இதனால் வயலூர் கிராமத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். இதன்பின் சம்பவ இடத்திற்கு உதவி ஆட்சியர் வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் அவர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.