தங்கை உணவு, தண்ணீரின்றி கணவன் வீட்டார் துன்புறுத்தி வருவதாக மனைவி புகுந்த வீட்டின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் திருவொற்றியூர் பகுதியை அடுத்த மார்க்கெட் லைன் ஏரியாவை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத். இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த லதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த 2017ம் ஆண்டு முதல் தனி குடுத்தனத்தில் வசித்து வந்தார்.
கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படவே கணவனை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்ற மனைவி பின் சில நாட்கள் கழித்து சமாதானம் அடைந்து மீண்டும் சேர்ந்து வாழ தொடங்கினார்.
அப்போது கணவன் மனைவியின் நடத்தை சரியில்லை என்று கூறி சேர்ந்து வாழ மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து கணவருடன் சேர்ந்து வாழ வைக்க கோரி திருவொற்றியூர் காவல் நிலையம் முன்பு சில மாதங்களுக்கு முன்பு தீக்குளிக்க முயன்றார் லதா.
அப்போது காவல்துறையினர் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைக்க ஓரிரு நாட்கள் மட்டுமே கணவன் மனைவி இடையே சந்தோஷம் நீடித்தது பின் மீண்டும் சண்டை முற்றவே கணவரும் அவரது குடும்பத்தாரும் தன்னை கொடுமைப்படுத்தி வருவதாக கூறி, கணவன் வீட்டின் முன்பு இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நான்கு மணி நேரத்திற்கு பிறகு காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில்,
தனது கணவர் வீட்டார் போன வாரத்தில் தன்னை வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டதாகவும், உணவு, தண்ணீர் இன்றி கஷ்டப்பட்ட நான் முதல் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பியதில் எனக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு மாற்று துணி கூட இல்லை அதை கேட்டால்கூட விரிவாக பேசி காயப்படுத்தினார்கள். ஆகையால் கணவர் வீட்டார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.