செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில், இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. 2016இல் போடப்பட்ட அரசாணை எண் 108 ரத்து செய்யப்பட வேண்டும், 1998க்கு முன்பு இருந்தபடி பகுதி முறையில் வசூலிக்கும் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும், கோவில் மனையில் நீண்டகாலமாக வசித்து வரக்கூடிய…
மாதம் மாதம் இ.எம்.ஐ_யாக வாடகை பணம் செலுத்தி உள்ள அனைவருக்கும் அவரவர் வசிக்கும் இடத்தில் மனைப்பட்டா வழங்க வேண்டும். இறையன்பு ஐஏஎஸ் அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை உடனடியாக வெளியிடுவதுடன், உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை எங்கள் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தமிழக அரசின் கவனத்திற்கு முன் வைத்திருக்கிறோம்.
தமிழக அரசு கோவில் மனையில் குடியிருப்போர், கடைகள் வைத்திருப்போர், நிலங்களில் பயிர் செய்வோர் ஆகிய ஏழை – எளிய மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, விரைவில் நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்துடன் இறையன்பு ஐஏஎஸ் தலைமையிலான இந்த குழுவின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாடகை வசூல் செய்கிறோம் என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொள்ளுகின்ற போக்குகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். வீடுகளை காலி செய்வது, கடைகளை காலி செய்வது… சில இடங்களில் அவற்றை இடித்து தள்ளுகின்ற முயற்சியில் ஈடுபடுவது போன்ற நடவடிக்கைகள் அதிர்ச்சி அளிக்கின்றன. எனவே தமிழக அரசு தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் முன் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகள் அனைத்தையும் கனிவோடு பரிசீலிக்க வேண்டும், அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என தெரிவித்தார்.