டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள் மூடப்பட்ட பிறகு பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன் மற்றும் கோபிநாத் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் மதுபான கடைகள், பார்கள் இரவு 10 மணிக்கு மூடப்படுவதாகவும், ஆனால் கடை மூடப்படும் நேரங்களில் மதுபானங்களை வாங்கும் மது பிரியர்கள் அதனை சாலை ஓரங்களிலும், கடைகள் முன்பாகவும், பொது இடங்களில் வைத்து மது அருந்துவதாகவும், இதனால் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறது.
மேலும் இதனால் தனியாக செல்லும் பெண்களுக்கு எதிராகவும் குற்ற சம்பவங்கள் ஏற்பட்டு வருவதாகவும், எனவே பொது இடங்களில் மதுபானங்கள் அருந்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும்மனுவில் கூறியிருந்தார் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனு தொடர்பாக தமிழக அரசும், டாஸ்மாக் நிறுவனமும் வருகின்ற 4ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளனர்.