மின் இணைப்புடன் ஆதார இணைக்க வற்புறுத்தக் கூடாது என வழக்கறிஞர் ரவி என்பவர் தொடர்ந்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது..
தமிழகத்தில் முதல் 100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணத்தை அரசு மானியமாக வழங்குகிறது. இந்த மானியத்தை பெற மின் நுகர்வோர் தங்களுடைய மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்எல் ரவி (வழக்கறிஞர்) என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும் எனவும், வாடகை வீட்டுக்காரர்களுடைய ஆதாரை இணைத்தால் அவர்கள் காலி செய்த பின் புதிதாக அவர் வருபவர்களின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஆதார் எண்களை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு ஆதார் சட்டப்படி ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக்கூடிய வேறு ஆவணங்களை பற்றி அறிவிப்பை வெளியிடவில்லை என தெரிவித்திருந்தார். ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை என அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.. மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால் அதற்கு மாநில தொகுப்பு நிதியிலிருந்து தான் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்..
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் போது வீட்டு உரிமையாளர்கள் ஆதார் எண்ணை மட்டும் இணைக்க முடியும் என்பதால் அரசு மானியம் வாடகைதாரர்களுக்கு கிடைக்காது எனவும், ஆதார் இணைப்பது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணைய ஒப்புதலை பெறவில்லையெனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் வாடகைதாரர்கள் மானியம் பெறும் விஷயம் என்பது உரிமையாளருக்கும், வாடகை தாரருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை எனவும் மீட்டர் அடிப்படையில் தான் ஆதார் இணைக்கப்படும் எனவும், அனைத்து ஒப்புதலை பெற்ற பிறகு ஆதார் இணைப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் பதில் வாதத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை எல்லாம் கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்பளித்துள்ளனர். இந்த வழக்கு தகுதி இல்லாத வழக்கு, அடிப்படை முகாந்திரம் இல்லாத வழக்கு என கூறி வழக்கறிஞர் ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.