சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்த அவர் பேசியதாவது, அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டால் எடப்பாடி பழனிச்சாமி அரசியல் அனாதையாக மாறிவிடுவார். அதன் பிறகு கட்சியில் தான் சேர காரணமாக இருந்த சேலம் கண்ணன், தன்னை முதல்வராக்கிய சின்னம்மா சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் ஆட்சி நீடிக்க துணை நின்ற ஓபிஎஸ் ஆகியோருக்கு துரோகம் செய்துள்ளார். துரோகத்தை கொள்கையாகக் கொண்டவர்தான் எடப்பாடி பழனிச்சாமி.
அவர் கட்சிக்காக என்ன தியாகம் செய்துள்ளார். நன்றி மறந்ததும், துரோகமும் மட்டும் தான் செய்துள்ளார். அதிகார பணபலத்தால் எதையும் விலை கொடுத்து வாங்கி என்ற அதிகார வெறி பிடித்தவர் தான் எடப்பாடி பழனிச்சாமி. ஓபிஎஸ் கட்சியை ஒற்றுமையாக கொண்டு செல்லலாம் என்று தான் கூறுகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு நாம் இயக்கத்தை காக்க வேண்டும். அதிமுக இயக்கமும் நமக்கு தான். இரட்டை இலையும் நமக்கு தான். பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் கிடையாது. மேலும் கட்சித் தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஓபிஎஸ் 2026-ம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று கூறினார்.