கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில் அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மதியம் 12 மணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் பிஎப். 7 என்ற புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.. கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்று உருவான நிலையில் தொடர்ந்து 2 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சினையாக அது உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வந்தது.
இந்த நிலையில் உருமாற்றம் அடைந்த கொரோனா மீண்டும் தன்னுடைய கோர தாண்டவத்தை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவிலும், அதேபோல தமிழ்நாட்டிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அங்கு இருக்கக்கூடிய அதிகாரிகள் அந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழக சுகாதாரத்துறை சார்பில் மத்திய அரசிடம் ஏற்கனவே நேற்றைய தினம் கடிதம் எழுதப்பட்டது. விமான நிலையத்திற்கு வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்வதற்கு தேவையான அந்த நடவடிக்கைகள், அனுமதி போன்றவையெல்லாம் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளக்கூடிய ஆலோசனைக் கூட்டம் தொடங்கவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது, அதிகமாக மக்கள் கூடுதற்கு தடை விதிப்பது போன்ற ஒரு சில கட்டாயங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.