விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனா உள்ளிட்டா சில நாடுகளில் புதியவகை பிஎப். 7 கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக இந்தியாவில் 3 பேருக்கு புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு மக்கள் சென்று தமிழகத்திற்கு வரக்கூடிய நிலையில், அவர்கள் மூலமாக புதிய வகை உருமாறிய பிஎப். 7 கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் துறை சார்ந்த செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.