Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 25, 26-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

நேற்று தென்மேற்கு வங்கு கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 8:30 மணிக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு- தென்மேற்கு திசையில் இலங்கை வழியாக குமரி கடல் பகுதிகளை நோக்கி நகர கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் இன்று மற்றும் நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டிசம்பர் 25-ஆம் தேதி தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் டிசம்பர் 26-ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடுமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 23 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் டிசம்பர் 22-ஆம் தேதி சூறாவளி காற்று  45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் . அதேபோல்  தமிழக கடலோரப் பகுதிகள் குமரி கடல் பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலே கூறப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Categories

Tech |