பிக் பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர் விக்ரமன் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வாரம் நடந்துவரும் கனா காணும் காலங்கள் டாஸ்க்கில் உயர்நிலைப்பள்ளி மாணவராக பிக்பாஸ் போட்டியாளர்கள் நடித்து இருந்தனர். அப்போது சமூககருத்தை தெரிவிக்கும் அடிப்படையில் ஓவியம் வரைய வேண்டும் என பிக்பாஸ் கூறியிருந்த நிலையில், மலைப்பகுதிகளில் இருந்து பழங்குடியின மக்கள் அகற்றப்படுவதன் அவலம் பற்றி விக்ரமன் ஓவியம் வரைந்திருந்தார். ஆனால் இவர் வரைந்தது ஓடிடியில் 24 மணி நேர ஒளிபரப்பில் மட்டுமே காண்பிக்கப்பட்டது, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை.
அதேபோன்று மற்றொரு டாஸ்க்கில் விக்ரமன், அம்பேத்கருக்கு “ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த இந்நாட்டின் நிலையை தலை நிமிர செய்தவர் நீங்கள்” என கடிதம் எழுதினார். இதுவும் ஓடிடியின் 24/7 ஸ்ட்ரீமிங்கில் சில வினாடிகள் மட்டுமே ஒளிபரப்பாகியது. சமூககருத்து என்ற டாஸ்க்கில் மிக முக்கியமான இந்த 2 காட்சிகளும் தொலைக்காட்சியில் ஏன் கட் செய்யப்பட்டது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் விக்ரமன் போன்ற நபர்களிடம் ஒருதலை பட்சமாக நடந்துகொள்கிறார் என கமல்ஹாசன் மீது குற்றம்சாட்டி வருகின்றனர்.