சென்னை மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் அமைந்துள்ளது. இங்கு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கணவரை பிரிந்த ஜெயந்தி என்பவர் கடந்த 10 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மூன்றாவது மாடியில் இருக்கும் சமையலறைக்கு காபி போடுவதற்காக ஜெயந்தி சென்ற போது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது.
அதனை அணைக்க முயற்சி செய்தும் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதால் அங்கும் எங்கும் ஓடிய ஜெயந்தி 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதனையடுத்து காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயந்தியை அங்கிருந்தவர்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.