நடப்பு ஆண்டு தைப்பொங்கல் விழா அடுத்த மாதம் கொண்டாடப்பட இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை போன்றவை வழங்கப்படும். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 2ம் தேதி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை அகதிகள் முகாம்களில் இருப்பவர்களுக்கு இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் எதிர்கட்சியாக இருந்தபோது ரூ.5000 பொங்கல் பரிசுதொகை வழங்க வேண்டும் என கேட்ட உதயநிதி ஸ்டாலின், தற்போதைய திமுக ஆட்சியில் அத்தொகையை வழங்க வலியுறுத்துவாரா..? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள உடன்பிறப்புகள், “கொரோனா காலக்கட்டம் என்பதால் ரூ.5000 வழங்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் கேட்டிருந்தார். தற்போது நிலைமை சீராக இருப்பதால் வழக்கம்போல் கொடுக்கும் பரிசுத் தொகையை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக வீண் குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம்” என பதிலடி கொடுத்து வருகின்றனர்.