நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தீட்டுக்கல் வனப்பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக அந்த பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு நாய்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்ததை பார்த்த பொதுமக்கள் உடனடியாக விலங்குகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் வந்து 2 வளர்ப்பு நாய்களையும் மீட்டு சர்வதேச வளர்ப்பு பிராணிகளுக்கான பராமரிப்பு மையத்தில் ஒப்படைத்தனர். ஒரு வாரத்திற்கு மேலாக உணவு மற்றும் தண்ணீர் இன்றி மெலிந்து போய் இருந்த 2 நாய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஊட்டி மேற்கு போலீசார் நடத்திய விசாரணையில், பொறி வியாபாரம் செய்து வந்த உதயகுமார் என்பவர் 2 கிரேட் டேன் ரக நாய்களை வளர்த்து வந்தது தெரியவந்தது.
அவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் சிகிச்சை பெறுவதற்காக குடும்பத்தினருடன் கோவைக்கு சென்று விட்டார். அந்த இரண்டு நாய்களும் குட்டி ஈனும் வயதை கடந்து விட்டதால் அதனால் எந்த பலனும் இல்லை என கருதி 2 நாய்களும் சிறுத்தை அல்லது ஏதாவது விலங்கினத்திற்கு உணவாகட்டும் என வனப்பகுதியில் விட்டு சென்றது தெரியவந்தது. அவர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வளர்ப்பு பிராணிகள் நல பாதுகாப்பு செயல்பாட்டாளர் நைஜில் கூறியதாவது, கொரோனா தாக்குதலுக்கு பிறகு வெளியிடங்களுக்கு செல்ல முடியாததால் மனிதர்களுக்கு வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வம் அதிகரித்தது. வீட்டில் வளர்க்கும் பிராணிகளை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லை என்றால் அதற்குரிய மையங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுபோன்று காடுகளில் விட்டுச் செல்லக் கூடாது என தெரிவித்துள்ளார்.