மார்ச் 31ஆம் தேதி வரை கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கூட்டமாக பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு தொடக்க பள்ளிகளுக்கு வருகின்ற மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள கர்நாடகா , கேரளா எல்லைகளின் வணிக வளாகம், திரையரங்கத்தை வருகின்ற 31ம் தேதி வரை மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் தங்களுடைய கட்சி நிகழ்வுகளை நிறுத்தி வைத்துள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளை வருகின்ற 31ம் தேதி வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதில் ,
தமிழக எல்லையோர மாவட்டங்களில் மார்ச் 31ஆம் தேதி வரை திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் திமுகவினருக்கு கட்சித் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள். தேனி , குமரி , திருப்பூர் , கோவை , நீலகிரி, கிருஷ்ணகிரி, நெல்லை , தென்காசியில் திமுக நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு. அதே போல திருவள்ளூர், வேலூர் , ராணிப்பேட்டை , ஈரோடு , திண்டுக்கல், தர்மபுரி , விருதுநகரிலும் கட்சி நிகழ்வுகளை ஒத்திவைக்க முக. ஸ்டாலின் வேண்டியுள்ளார்.