தர்மபுரி அருகே புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 66 குடிசைகளை அதிகாரிகள் திடீரென அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி பகுதியில் கல்லாங்குத்து என்னும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் பஞ்சப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள 66 பேர் இந்த புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து குடிசை அமைத்துக் கொண்டனர். ஆனால் இது புறம்போக்கு நிலம் அரசுக்கு சொந்தமானது.
இதில் குடிசை அமைத்தவர்களை உடனடியாக அகற்றக் கோரி வருவாய்த்துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அளிக்கப்பட்டும், எச்சரிக்கை விடுக்கப்பட்டும் அவர்கள் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவும் இல்லை.
குடிசையை அகற்றவும் இல்லை. இதனால் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 66 குடிசைகளையும் கொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றினர். பின் இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு வருவாய் துறையினரிடம் முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் பாதுகாக்கப்பட்ட இடமாகும், இங்கே குடிசை அமைக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் வருவாய் துறை அலுவலகத்தில் பட்டா வேண்டி விண்ணப்பம் அளியுங்கள்.
இந்த இடத்தை தவிர வேறு இடத்தில் பட்டா வழங்கப்படும். அங்கு குடிசை அமைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் இங்கே குடிசை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.