சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரிய குற்றவாளி முகேஷ்சிங்கின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20 ஆம் தேதி காலை 5: 30 மணிக்கு அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய நால்வரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே முகேஷ் சிங் என்ற குற்றவாளி உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்திருந்தான். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தபோது, குற்றவாளி முகேஷ்சிங்கின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். மேலும் அடிப்படை முகாந்திரம் எதுவும் இல்லாததால் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. குற்றவாளிகள் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில் மனு தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.