கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் அரசு மருத்துத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்தபோது பார்வை பறிபோனதாக இழப்பீடு தரக்கோரி வழக்கு தொடரப்பட்டது. மருத்துவர்கள் அலட்சியம் காரணமாகவே பார்வை பறிபோனதாக கூறி திருவாரூர் கோர்ட்டில் விஜயகுமாரி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த விஜயகுமாரிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2015ல் திருவாரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி தமக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும், அந்த உத்தரவை அமல்படுத்த கோரியும் விஜயகுமாரி மனு தாக்கல் செய்தார். இழப்பீடு தராததால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய செப்டம்பரில் திருவாரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனைத்தொடர்ந்து பொருட்களை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆட்சியர் அலுவலகம், மருத்துமவனை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடமை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பிற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு. நிதியிழப்பை தொடர்புடைய அதிகாரியிடம் அரசு வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்தது.
மேலும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் ரூ 5 லட்சம் இழப்பீடு தர திருவாரூர் ஆட்சியர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கோர்ட் கெடு விதித்துள்ள நீதிமன்றம் 10 தேதிக்குள் இழப்பீடு தராவிடில் சொத்துக்களை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் பொருட்களை பறிமுதல் செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.