கொரோனா எதிரொலி காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல தமிழகத்தில் திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தையும் மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது. அதேபோல கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.