எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நேற்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தோம். அந்த திட்டங்களுக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தற்போது இவர்கள் நம்ம ஸ்கூல் என்ற பெயரை சூட்டி துவக்கி வைத்துள்ளனர்.
மேலும் இந்த திட்டத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிக்கு சுமார் 3 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது” என அந்த அறிக்கையில் கூறியிருந்தார். இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, “இந்த திட்டத்தின் தொடக்க விழாவிற்கு ஒரே நாளில் மூன்று கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது என்பது பொய். மேலும் திமுக அரசின் புதிய திட்டத்திற்கு ஒரே நாளில் 50 கோடி கிடைத்துள்ளதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் வயிற்றெரிச்சலில் இப்படி கூறி வருகின்றனர். ஓராண்டு முழுமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு, ஆய்வுக்கூடங்களுக்கும் சேர்த்தே 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”என அவர் கூறியுள்ளார்.