தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜனவரி இரண்டாம் தேதி முதல் பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ஆயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வழக்கமாக நேரடியாக மக்கள் கையில் வழங்கப்படும் இந்த தொகை இந்த முறை ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தமிழகத்தில் 14,84,582 பேர்ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண்ணை இணைக்காமல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதாருடன் இணைக்க வேண்டும் எனவும் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்களின் ஆதாருடன் எந்த வங்கியின் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் வேறு வங்கி கணக்கு எண்ணை எவ்வாறு இணைக்க வேண்டும் என்றும் உங்களின் ரேஷன் கார்டு இதற்கு தகுதியானது தானா என்பதையும் அறிந்து கொள்ள,
முதலில் https://bit.ly/AadhaarSeedingStatus என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆதார் மற்றும் வங்கி விவரம் இணைக்கப்பட்டுள்ளது சரிபார்க்கும் பக்கத்தை திறந்தவுடன் உங்களின் ஆதார் எண் மற்றும் கேப்சாவை பதிவிட்டு வரும் ஓடிபி உள்ளிட வேண்டும். உங்கள் ஆதாரில் எந்த வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது என்பது திரையில் தோன்றும். அந்த வங்கி கணக்கில் தான் உங்கள் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்யப்படும். அந்தத் திரையில் எந்த விவரமும் காட்டவில்லை என்றால் நமது கணக்கு உள்ள வங்கிக்கு சென்று ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இந்த கணக்கில் தான் பொங்கல் பரிசு பணம் செலுத்தப்படும்.