நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு அய்யன்கொல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மேங்கோரேஞ்ச் பகுதியில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியது. அதே நேரம் பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி மாணவரான லாலு பிரசாத், கூடலூர் டேன்டீ தொழிற்பயிற்சி மையத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களான அனீஸ், தீனதயாளன் ஆகிய மூன்று பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.