இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை 5 ஆண்டுகள் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மனைகளை குத்தகைக்கு விடும்போது அது வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட வாடகையின் தொடக்க தொகையாக வைத்து ஏலம் நடைபெறும். இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக குத்தகைக்கு வழங்கப்படும் மனை மற்றும் கட்டிடங்களுக்கு பொது ஏலம் முடிவு செய்யப்பட்ட 15 தினங்களுக்குள் முதல் ஆண்டுக்கான குத்தகை தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும்.
இதனையடுத்து வாடகை தொகையை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்த வேண்டும். மேலும் ஓர் ஆண்டுக்கான முழு தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்த தவறினால் அவர்களுக்கான உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். இதனையடுத்து கோவிலுக்கு அந்த நிலம் தேவைப்பட்டால் அதனை திரும்பி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இது குறித்து 2 மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு தகவல் அளிக்கப்படும். மேலும் குத்தகைக்கு வாங்குபவர்கள் அடமானம் அல்லது உள்குத்தகைக்கு இந்த நிலங்களை விடக்கூடாது என அந்த அறிக்கைகள் கூறப்பட்டுள்ளது.