சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது.
இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,0000க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் வைரசால் 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளன. நாட்டின் முக்கிய நகரங்களில் திரையரங்குகள், மால்கள் ஆகியவையும் மூடப்பட்டுள்ளன. ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்திலும் இந்த வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் கல்வி நிறுவனங்கள், டாஸ்மாக், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகள் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளை சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.