கடந்த ஜூலை 11ஆம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த பொதுக்குழு அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி ஓபிஎஸ் அந்த பொதுக்குழுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளராக தான் தற்போது தொடர்வதாக கூறிய ஓபிஎஸ் சமீபத்தில் அதிமுகவிற்கு நிர்வாகிகளையும் நியமித்தார். இவ்வாறு ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் மாறி மாறி மோதிக் கொண்டு இருக்க மறுபக்கம் சசிகலா அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி மற்றும் சசிகலா உள்ளிட்ட நான்கு பேர் இணைந்தாலும் அதிமுகவால் வெற்றி பெற முடியாது என அதிமுகவின் மூத்த தலைவர் பன்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். தற்போது பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றாக சேர்ந்து மக்களிடம் ஓட்டு கேட்க முடியாது. மக்களிடம் பழையபடி நல்ல எண்ணத்தை பெற்றால் மட்டுமே எதிர்காலத்தில் வெற்றி பெற முடியும். இல்லையென்றால் அதிமுகவின் வெற்றி என்பது கனவாகி விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.