2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளியன்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சட்டப்பேரவையை ஒத்திவைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி கொரோனா காரணமாக பேரவையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு போதிய பாதுகாப்பும், மருத்துவ உதவிகளும் செய்ய அரசு தயாராக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், தமிழக அரசின் உத்தரவுகள் சரியாக பிறப்பிக்கப்படுகிறதா என்பதை குழு கண்காணித்து அறிக்கை கொடுக்கும் என அவர் கூறியுள்ளார்.