உலக சுகாதார அமைப்பு தலைமையகத்தில் பணியாற்றும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மிகவும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது சீனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது. ஆனால் மற்ற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி 130க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவா (Geneva) நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் பணிபுரிந்து வரும் இருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதாக கடந்த வாரம் கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர்கள் விடுமுறையில் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த மற்ற பணியாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (15 ஆம் தேதி) நிலவரப்படி, ஸ்விட்சர்லாந்தில் ஒரே நாளில் சுமார் ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 200 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 14 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.