ஐ.ஐ.டி ரூர்க்கி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இணைந்து கர்ப்பிணி பெண்களின் பராமரிப்புக்காக செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. “ஸ்வஸ்த்கர்ப்” எனும் இச்செயலியை பிரதமரின் ஸ்வஸ்த் பாரத் திட்டத்தின் கீழ் உருவாக்கி இருக்கின்றனர். இந்த செயலி மருத்துவ வசதிகளானது குறைவாகவுள்ள கிராமப் பெண்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த செயலியின் வாயிலாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைகளை பெறலாம்.
அத்துடன் உரிய நேரத்தில் மருத்துவரை அணுக பரிந்துரை செய்யும். மருத்துவ பரிசோதனைகளின் அனைத்து விபரங்களையும் இது பதிவு செய்து வைத்துக்கொள்ளும். மெஷின் லேர்னிங் வாயிலாக எதிர்காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளை கண்டறியும் அடிப்படையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர். கொரோனா தொற்று காலங்களில் மருத்துவமனைக்கு போக முடியாத சூழ்நிலையில், இந்த செயலி மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இதனை 150 கர்ப்பிணி பெண்களிடம் வழங்கி பரிசோதித்ததில் அதன் செயல் திறன் சிறப்பாக இருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.