திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 100% பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் 22,969 பேர் வந்துள்ளனர். நேற்று முன்தினம் சீனாவில் இருந்து தென்கொரியா இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருடைய ரத்த மாதிரிகள் இன்று சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டு அது எந்த வகை தொற்றை சேர்ந்தது என்பது குறித்து ஆராயப்பட இருக்கிறது. இந்நிலையில் உலகத்தில் புதிய கலாச்சாரம் ஒன்று தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதாவது ரத்தத்தை எடுத்து ஓவியங்கள் வரைந்து அதை விரும்பியவர்களுக்கு அனுப்புவதை பல தொழிலாக செய்து வருகின்றனர்.
இதுபோன்ற கலாச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். சென்னையில் உள்ள பிளட் ஆர்ட் நிறுவனங்களை சோதனை செய்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சுகாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் இந்த தொழிலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மூக்கு வலியாக செலுத்தப்படும் தடுப்பூசி மருந்து தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கிறது. இது குறித்து ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த மருந்து தமிழக அரசு மருத்துவமனைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.