சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸால் இதுவரை 147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ்சை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை, திரையரங்குகள் , திருமண மண்டபங்கள் , மால்களில் திறக்க வேண்டாம் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மக்கள் அதிகமாக கூட வேண்டாம் என்றும் , திட்டமிட்ட திருமண நிகழ்வுகள் மட்டும் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நேற்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து சென்னை தி. நகரில் உள்ள அனைத்து கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது. அதன்படி இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
இதனை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த அவர் மக்கள் பயப்பட வேண்டாம் அதே நேரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் கடைகள் மற்றும் மால்களை முன்னெச்சரிக்கையாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்.