கொரோனா பாதிப்பால் மாணவர்களுக்கு தேர்வு கிடையாது அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் ஆல் பாஸ் என்ற ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். எட்டாம் வகுப்பு வரைக்கும் மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அனைவரும் தேர்ச்சி என்ற ஒரு நடைமுறை தான் தற்போது வரைக்கும் இருக்கிறது. இதில் சில சட்ட திருத்தங்கள் , விவாதங்கள் எல்லாம் நீண்டு கொண்டு இருந்தாலும் தற்போது இருக்கும் நடைமுறை என்பது எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி. எனவே தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும் அடுத்த வகுப்புக்கு செல்வதற்கு சிக்கல் ஏதும் ஏற்படாது.
தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் மார்ச் 31ஆம் தேதி வரைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஆதிக்கம் என்பது எந்த அளவுக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையில்தான் இந்த விடுமுறையை நீடிக்கப்படுமா ? என்ற ஒரு சூழல் இருக்கிறது. தமிழகத்தில் 6 வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்புக்கான தேர்வு என்பது தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொதுத்தேர்வுகளை தவிர மற்ற வகுப்புகள் அனைத்துக்குமே விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருக்கக் கூடிய சூழ்நிலையில் அனைவரும் பாஸ் என்ற கோரிக்கையும் ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்படுகிறது. மாணவர்களுடைய பாதுகாப்பை கருதி இதுபோன்ற ஒரு நடவடிக்கையை தமிழகத்தில் மேற்கொள்ளலாம் என்ற ஒரு கோரிக்கை முன்வைக்கப்படுள்ளது. குறிப்பாக தனியார் பள்ளிகளில் ஏற்கனவே ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் என நேரடியாக அடுத்த ஆண்டுக்கு பள்ளிக்கு வந்தால்போதும் என்ற உத்தரவை பெற்றோருக்கு அனுப்பி விட்டார்கள். எனவே தமிழகத்திலும் விரைவில் உத்தரவு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.