லண்டன் கல்லூரி ஒன்றில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா வைர சால் அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 500 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரி கணித உயிரியல் துறை பேராசிரியர் நெய்ஸ் ஃபெர்குசன் தலைமையிலான குழு இத்தாலியில் நிகழ்ந்து வரும் கொரோனா இறப்பு விகிதங்களின் அடிப்படையில் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், கொரோனா வைரசின் தாகத்திற்கு அமெரிக்காவில் 22 லட்சம் பேரும், பிரிட்டனில் 5 லட்சம் பேரும் பலியாவார்கள் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கொரோனா தொற்றை தடுப்பதற்கான சமூக விலகியிருத்தல் (social distancing) நடவடிக்கைகளுக்கு இந்த 2 நாடுகளும் முக்கியத்துவம் அளிக்காதது நிலைமை மோசமடைய காரணமாக அமையும் என ஆய்வு கூறுகின்றது. ஆய்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது விமர்சனம் வலுத்து வருகின்றது.