தமிழகத்தில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் குளறுபடி நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கைக்கு அமைச்சர் காந்தி கொடுத்துள்ள விளக்கம் ஏற்கத்தக்கது அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையின் போது நெசவாளர்கள் மற்றும் கைத்தறி தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்காக இலவச வேட்டி மற்றும் சேலை திட்டம் புரட்சித்தலைவர் காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போது பொங்கல் பரிசு தொகுப்பாக 2500 ரூபாய் கொடுத்ததோடு, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், உலர் திராட்சை, முந்திரி, ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேட்டி சேலைகள் போன்றவற்றை கொடுத்தார். இந்நிலையில் தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது தற்போது வழங்கப்படும் வேட்டி, சேலைகள் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் திராவிட அரசின் நிர்வாக திறமையின்மையால் இன்று முடங்கிப் போய் கிடக்கிறது.
நெசவாளர்களுக்கு தரமான நூல் வழங்காததால் அவர்கள் அரசுக்கே நூலை திரும்ப அனுப்புவதாகவும், தரமான நூல் தந்தால் தான் வேட்டி மற்றும் சேலையை நெய்வோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு அமைச்சர் காந்தி முறையாக விளக்கம் அளிக்கவில்லை. அவருடைய பதில் வளவள, கொளகொளவென, கழுவுற மீனில் நழுவுற மீனாக தான் இருக்கிறது. மேலும் நீங்கள் பதில் தந்து நேரத்தை வீணடிக்காமல் மக்களிடத்தில் திட்டத்தை கொண்டு போய் சேர்ப்பதில் கவனத்தை செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.