அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் எதிரெதிர் அணிகளாக மாறி தலைமையை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக மாற வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தான் கட்சியில் செல்லும் என்று கூறி வருகிறார். இந்நிலையில் ஜி20 மாநாடு நடைபெற்ற போது எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளர் என்று குறிப்பிட்டு மத்திய அரசு மாநாட்டில் கலந்து கொள்ள வருமாறு அழைத்திருந்தது.
அதன் பிறகு அதிமுகவின் வரவு, செலவு கணக்குகளை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் எடப்பாடியை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரித்து வரவு, செலவு கணக்குகளை பதிவேற்றம் செய்தது. இதைத்தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு அழைத்து இருந்தனர். இது ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு பேரடியாக விழுந்தது. இந்நிலையில் ரிமோட் எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷினின் செயல்பாடு மாதிரி நிகழ்வு டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் ஜனவரி 16-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ கடிதம் எழுதி அனுப்பி விடுத்துள்ளார். இந்த கடிதம் ஓபிஎஸ் தரப்புக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. ஏனெனில் தலைமை தேர்தல் அதிகாரி ஓபிஎஸ் பெயரை ஒருங்கிணைப்பாளர் என்றும், எடப்பாடி பெயரை இணை ஒருங்கிணைப்பாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் காரணமாக அதிமுகவில் இன்னும் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை தான் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளதோடு, ஓபிஎஸ் கை தற்போது ஓங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.