கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம் ராம்நகரில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வங்கி கடன் உதவி பெற்று தரும் பங்குதாரர். இவரிடம் திருவேங்கடசாமி என்பவர் கேரளாவை சேர்ந்த 2 பேர் கருப்பு பணம் வைத்துள்ளனர் எனவும், அதனை மாற்றுவதற்கு 1 லட்ச ரூபாய் கொடுத்தால் 2 லட்ச ரூபாய் தருவார்கள் எனவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். இதனை நம்பி பிரவீன் குமாரும், திருவேங்கடசாமியும் அம்பராம்பாளையம் சென்ற போது அங்கு வந்த மர்ம நபர் 1 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டு 2 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.
அவர் சென்ற பிறகு பையை பிரவீன் குமார் எடுத்து பார்த்துள்ளார். அப்போது 4 பணக்கட்டுகளில் மேல்புறமும் கீழ்ப்புறமும் தலா 500 ரூபாய் நோட்டுகளும், உள்புறமாக வெள்ளை தாள்களும் இருந்ததை பார்த்து பிரவீன் குமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த பாலக்காடு மைத்ரேயி நகரை சேர்ந்த தாகிர் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.