சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் துறை நடத்தும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான ‘ட்ரான்ஸ்நேசல் எண்டோஸ்கோபிக்’ உடற்கூறியியல் நரம்பியல் அறுவை சிகிச்சை தொடர்பான கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்தி மலர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்துள்ளார். இதில் மருத்துவமனையின் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின் டிஜிபி சைலேந்திரபாபு கூறியதாவது, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை பொது மக்களுக்கு சிறப்பாக மருத்துவ சேவையை வழங்குகிறது. அரசு ஊழியர்களுக்கான புகலிடம் அரசு மருத்துவமனை. சமீபத்தில் மூத்த போலீஸ் அதிகாரி வால்டர் தேவாரம் உடல் நல குறைவு காரணமாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அவரை போல் நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு மருத்துவமனயில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. உண்மையான சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் இருக்கின்றார்கள். “எனக்கும் மருத்துவராக வேண்டும் என்ற கனவு இருந்தது.
அதற்காக நான்கு வருடங்கள் முயற்சி செய்தேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறாமல் போனது”. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் மருத்துவராக வேண்டும் என நினைக்கின்றனர். இது ஆரோக்கியமான விஷயமாகும். போலீஸ் வேலையில் இருக்கும் அதிகாரிகளுக்கு உடல் உழைப்பு அதிகம். அதனால் அவர்களுக்கு முதுகு உடல் வலி அதிகம் ஏற்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மாதம் தோறும் மூன்றாவது திங்கட்கிழமைகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்படும் முதுகுவலி சிகிச்சை பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. இதனை அனைத்து போலீசாரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.