கொரோனாவின் தாக்குதலுக்கு துருக்கியில் முதல் நபர் ஒருவர் மரணமடைந்தார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7, 987 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3, 237 பேர் இறந்துள்ளனர். மேலும் அந்நாட்டில், 80, 894 பேருக்கு வைரஸ் பரவிய நிலையில், அவர்களில் 69, 601 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 8,056 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொண்டிருக்கின்றனர். அவர்களில் 2, 622 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகையே உலுக்கி வரும் இந்த கொடிய கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளுள் ஒன்றான துருக்கியிலும் வேகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், துருக்கி நாட்டில் கொரோனாவின் தாக்குதலுக்கு முதல் பலியாக ஒரு முதியவர் (வயது 89) இன்று பலியாகியுள்ளார். மேலும், 98 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.