கொரோனா தொற்றை பரப்பக்கூடிய வகையில் செயல்பட்டதால் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். யாரையும் கூட்டமாக அனுமதிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா காரணமாக ஒரே இடத்தில் அதிக நபர்கள் கூட வேண்டாம் என்று அறிவித்து மட்டுமின்றி இதனை பேரிடராக அறிவித்த பின்பும் காவல்துறையினர் அனுமதி இன்றி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். அரசு பேரிடராக அறிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொரோனா தொற்று நோய் பரப்பும் விதமாக நடந்து கொண்டதாக கூறி 200 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி இல்லாமல், காவல்துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.