கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இதுவரை இந்த வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இதனையடுத்து அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சா்வதேச நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பலவேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.