கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக ரேஷன் கடைகளில் அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தொடங்கிய கொடிய கொரோனா உலகம் முழுவதும் 176 நாடுகளுக்கு வேகமாக பரவி அச்சுறுத்தி வருகின்றது. கொரோனாவின் கோர தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு வங்காளத்தில் 2 பேர் உள்பட நாடு முழுவதும் இதுவரை 223 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக மேற்குவங்க மாநிலத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு தேவையான கூடுதல் உபகரணங்களை மத்திய அரசு எங்களுக்கு (மேற்கு வங்காளம்) வழங்க வேண்டும் என்றார்.
மேலும் பொது விநியோக திட்டத்தின் மூலம் ரேஷன் கடைகளில் ரூ 2 க்கு வழங்கப்படும் 1 கிலோ அரிசி அடுத்த 6 மாதங்களுக்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேற்கு வங்காள அரசு மாநில நிவாரண நிதி கணக்கை துவங்க இருக்கிறது என்று கூறிய அவர், இந்த கணக்கு மூலம் கொரோனா வைரசை எதிர்கொள்ள மாநில அரசுக்கு மக்கள் நிதி உதவி அளிக்கலாம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். மக்கள் அனைவரும் தன்னிச்சையாக வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் என்றும், கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் நாம் அனைவரும் ஓன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.