கொரோனா வைரஸ் எதிரொலியால் தமிழகத்தில் நடைபெற இருந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய , மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் விடுமுறை விட்டுள்ள சூழலில் உத்தரப்பிரதேச மாநில அரசு எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் யாரும் பள்ளிக்கு வர வேண்டாம். தேர்வு எழுத வேண்டாம் , அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்திலும் கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் எட்டாம் வகுப்பு வரை தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை பெற்றோர்கள், ஆசிரியர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, கொரோனா வைரஸ் எதிரொலியால் அனைத்து பொதுத்தேர்வுகளையும் இரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி கேள்வியை ஏற்ற தமிழக முதல்வர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.