இன்று மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு மக்கள் செல்லக்கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலக நாடுகளில் பாதிப்பு ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் அதன் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை தமிழகத்திலும் அதிகரிக்க விடாமல் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக சுற்றுலாத்தலங்கள், பூங்காக்கள், சினிமா, தியேட்டர்கள், மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை விதித்து இருந்தது.
ஆனால் பொதுமக்கள் மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம் கடற்கரையில் குவிந்த வண்ணமிருந்தனர். தற்போது இந்த கூட்டத்தையும் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இன்று மாலை 3 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை சென்னை மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளுக்கு செல்லக்கூடாது என்றும் அங்கு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.