Categories
உலக செய்திகள்

ஆப்கானில் அரசுப்படையினர் – தாலிபான்களுக்கு இடையே மோதல்… 7 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் அரசுப்படையினர் மற்றும் தாலிபான்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 7 பேர் பலியாகினர்.

கடந்த  2001 ஆம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்றுவருகின்றது. இந்த பயங்கர சண்டையில் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவளித்து வருகின்றன.

சமீபத்தில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தலிபான்கள் மற்றும் அமெரிக்க படைகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டாலும் ஆப்கான் அரசு படையினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்நாட்டின் கபிசா மாகாணம் நஜ்ரப் மாவட்டத்தில் இருக்கும் அரசுப்படையினரின் சோதனைச்சாவடியை இன்று குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு அரசுப்படையினரும் பதிலுக்கு பதில் தாக்கினர்.

நீண்டநேரம் இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் அரசுப் படையினர் 4 பேர் மற்றும்  பயங்கரவாதிகள் 3 பேர் என மொத்தம் 7 பேர் பலியாகினர். மேலும், அரசுப்படையை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்தார்.

Categories

Tech |