இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தோன்றி உலகையே கொலை நடுங்கச் செய்து வரும் கொரோனா வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் சில நாடுகளில் கொரோனாவின் வேகம் மிகவும் தீவிரமாக இருக்கிறது.
கொரோனா வைரசின் கோர பிடியில் இருந்த சீனா தற்போது கட்டுப்படுத்தி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், கடந்த சில நாட்களாக சீனாவில் யாருமே இறக்கவில்லை. நேற்றும் அதேநிலையில் தான் இருக்கிறது சீனா.. ஆனால் தற்போது சீனாவை விட ஐரோப்பிய நாடான இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இத்தாலியில் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 793 பேர் பலியாகியுள்ளனர் என்றும், ஒரே நாளில் பதிவான அதிகப்படியான பலி எண்ணிக்கை இது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இத்தாலியின் பிரதமர் கியூசெப் கோன்டே (Giuseppe Conte) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 4, 825 ஆக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் செயல்படும் முக்கியத்துவம் இல்லாத நிறுவனங்களை மூடும்படியும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.