கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச அளவில் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.
இந்நிலையில் உலகம் முழுவதும் இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13,067 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1, 98, 874 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95, 797 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொரோனா வைரசால் அதிகளவில் உயிரிழப்பைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் நேற்று மட்டும் 793 பேர் பலியாகியுள்ளனர். இதனால், அங்கு மொத்த உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குவதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக 2 பேர் பலியாகியுள்ளனர். அங்கு, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகவே கொரோனா தாக்கம் காரணமாக பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், முதல் உயிரிழப்பு நேற்று பதிவாகியிருக்கிறது.
உலக அளவில் இத்தாலியில் அதிகபட்சமாக 4, 825 பேரும், சீனாவில் 3, 261 பேரும், ஸ்பெயினில் 1,378 பேரும் இந்நோய்த் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதேபோல மத்திய கிழக்கு நாடான ஈரானில் 1, 556 பேர் பலியானதுடன், ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இங்கிலாந்திலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது.