கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக MP , MLA_க்கள் சம்பளத்தை வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி உள்ளது. குறிப்பாக தின சம்பளத்தை நம்பியுள்ள முறைசாரா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு பல்வேறு வகைகளில் உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்த நிலையில் முறைசாரா தொழிலாளர்களுக்கு திமுக நிதியுதவி அறிவித்துள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமைப்புசாரா தொழிலாளர்கள் , கட்டடத் தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இதுபோன்ற ஊதியம் சரியாக கிடைக்காமல் இருக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல தமிழக அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என்றும் , தமிழகத்திலுள்ள தொழிலதிபர்களும் இந்த மனித நேயம் முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டுமென்று முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
#CoronaVirus பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள்.#TNGovt-ம் இதற்கென கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் உதவ வேண்டும். pic.twitter.com/pA0rxTi1KW
— M.K.Stalin (@mkstalin) March 22, 2020
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள சுய ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுத்ததை போல தொடர்ந்து விழிப்புணர்வோடு இருந்து சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.