கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் வகையில் நாளை முதல் சட்டப்பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட 3 மாவட்டங்களில் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட கூடாது. தினக்கூலி தொழிலாளர்கள், நடைபாதைவாசிகளுக்கு உணவு வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய , மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மாவட்டங்களிலும் அத்தியாவசிய தேவைகள் தவிர பிற அனைத்து சேவைகளும் முடக்கப்படுகின்றன என்ற அதிரடி அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதேபோல மாநிலங்களுக்கு இடையே அரசு, தனியார் பேருந்து சேவைகள், சென்னையில் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்டவை இன்று முதல் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தபடுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இதனை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் மு. க. ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இதனையடுத்து ஏப்ரல் 9ம் தேதி வரை நடைபெற இருந்த தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை , ஈரோடு , காஞ்சிபுரம் மாவட்டங்களை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால் நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.