அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்று பரிசோதனை நடத்தப்பட்டு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 3, 07, 725 பேருக்கு இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. இவர்களில் 13,054 பேர் பலியாகியுள்ளனர். இதில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகையில் பணியாற்றிவந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது நேற்று பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட அந்த நபர் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் கீழ் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனால் துணை அதிபர் பென்சுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து துணை அதிபர் மற்றும் அவரது மனைவி ஹரென் பென்ஸ் இருவருக்கும் இன்று கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டதாக துணை அதிபர் பென்சின் செய்தித்தொடர்பு அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் அதிபர் டிரம்புக்கு கொரோனா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.